பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் 5 நாட்களே மீதமுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் பட்டம் வென்றவருக்கு பரிசுகளை கொடுக்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிக்பாஸ் பட்டத்தை வென்றவருக்கு மிகப்பெரிய நட்சத்திரத்தை அழைத்து அவர் கையால் கொடுக்க வேண்டும் என்று சேனல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, மிகப்பெரிய நட்சத்திரமான கமல் பிக்பாஸ் மேடையில் இருக்கும்போது, மற்றொரு பெரிய நட்சத்திரமும் மேடையில் இருந்தால் அந்நிகழ்ச்சிக்கு மேலும் மவுசு கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு விஜய்யை அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கையால் பிக்பாஸ் வெற்றியாளருக்கான பரிசுக் கோப்பையை வழங்கவும் சேனல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக விஜய்யிடம் சேனல் நிர்வாகம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் மேலும் குதூகலமாகியிருக்கிறார்கள். தற்போது பிக்பாஸ் வீட்டில் 5 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இறுதி நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வருவார்கள், அதில் ஒருவர் மக்களின் அதிகப்படியான ஓட்டு அடிப்படையில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கமல் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

வரும் சனிக்கிழமை 5 பேரில் வெளியேறப்படுபவரின் பெயரை அறிவித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்வாரா? மாட்டாரா? என்பதை வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம். அதுவரை அனைவரும் பொறுமை காப்போம்…