விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்தின் டீசருக்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அந்த வகையில், இப்படத்தின் டீசர் அட்லி பிறந்தநாளான செப்டம்பர் 21-ந் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை 6 மணிக்கு ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த டீசரை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தது. அதேநேரத்தில், இப்படத்தை லைக் செய்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்களில் இருந்தது.

இந்த டீசர் வெளியிட்டு 20 மணி நேரம் ஆகியுள்ள நிலையில், இதை கண்டுகளித்தோரின் எண்ணிக்கை 1 கோடியை தொட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் எந்தவொரு டீசருக்கும் கிடைக்காத வரவேற்பு என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பல்வேறு சாதனைகளையும் இந்த டீசர் முறியடித்து வருவதாக கூறப்படுகிறது. டீசருக்கே இந்தளவுக்கு வரவேற்பு இருக்கும்போது, படத்திற்கு எந்தளவுக்கு இருக்கப்போகிறது என்பதை நினைக்கும்போதே வியப்பாக இருக்கிறது.