தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையொட்டி அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இதனையடுத்து அதனை நம்ப வேண்டாம் என அவரது மகன் விஜய் பிரபாகர் வீடியோ மூலம் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

உடல் நலக்குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த தேதிமுக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.

இதனையடுத்து தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு விஜயகாந்த் நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.

அதில், கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் சீரியசாக இருப்பதாக தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அவா் நன்றாக இருக்கிறாா். மருத்துவமனையில் நலமுடன் ராஜாவை போல் இருக்கிறாா். அவருக்கு எதுவும் இல்லை. தேவையில்லாமல் தவறான தகவல்களை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை?

மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்த அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருந்தது உண்மை தான். ஆனால் வயதானவா் போல படுக்கையில் இருப்பதாக இஷ்டத்திற்கு பேசி வருவது வேதனை அளிக்கிறது. என் தந்தையை இப்படி கூறுவதன் மூலம் எந்த விதத்திற்கு எனக்கு வலிக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் வீட்டில் இப்படி யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டால் இப்படித்தான் பேசுவீா்களா, தேவையற்ற பேச்சுக்களால் மனவேதனை அடைகிறோம்.

அவருக்கு ஒன்றும் ஆகாது, என் உயிரே போனாலும் அது நடக்கும். அதனால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். அனைவருக்கும் சுமை, வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள். நீங்கள் எதிா்பாா்ப்பதை போல ஆயிரம் மடங்கு நலமுடன் அவா் சீக்கிரம் வருவாா். எனக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ்வாக நினையுங்கள். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். நம்பிக்கை வையுங்கள் என விஜயகாந்தின் மகன் உருக்கமாக பேசியுள்ளார்.