தற்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு விருது கொடுத்தால் அதை வாங்க மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, தான்யா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கருப்பன். இப்படம் வருகிற 29ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி “ விக்ரம் வேதா படத்தில் நடிக்கும் போது, அந்த கதாபாத்திரத்தில் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பதட்டம் இருந்தது. ஆனால், கருப்பன் படத்தை பொறுத்த வரை எனக்கு அந்த பதட்டம் இல்லை. ஏனெனில் இது மண் சார்ந்த கதை. இதில் ஒரு மாடு பிடி வீரனாக நடித்துள்ளேன். மேலும், கணவன், மனைவிக்கு இடையே உள்ள அன்பை இப்படம் பேசும்.

அப்போது ஒரு நிருபர் மத்திய அரசு உங்களுக்கு தேசிய விருது கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி “இது கொஞ்சம் அட்வான்சான கேள்வி. இருந்தாலும் அதற்கு பதில் சொல்கிறேன். நீட் தேர்வால் அனிதா என்ற மாணவியை நாம் இழந்துவிட்டோம். இந்த சூழ்நிலையில், எனக்கு தேசிய விருது கொடுத்தால், அதை நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். விருதை விட எனக்கு மக்களின் உணர்வே முக்கியம்” என அவர் பதிலளித்தார்.