சினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு தலா ஒரு சவரன் தங்கம் கொடுக்க இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜனநாதன் உலகாயுதா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் தினமான வருகிற மே 1ம் தேதி சினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு தங்கம் கொடுக்க திட்டமிட்டிருந்தார். இது கேள்விபட்ட விஜய் சேதுபதி, தொழிலாளர்களுக்கு இலவசமாக தங்கத்தை தானே கொடுப்பதற்கு முன் வந்துள்ளார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் கூறிய போது “ ஜனநாதன் சார் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் 100 மூத்த சினிமா கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கம் கொடுக்க இருப்பதாக என்னிடம் கூறினார். அதை நானே கொடுக்கிறேன் என அவரிடம் கூறினேன்.

எனக்கு எல்லாமே சினிமாதான். எனக்கு எல்லாமும் கொடுத்ததும் சினிமாதான். சினிமாவில் இருக்கும் தொழில் நுட்ப கலைஞர்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவது என்னுடைய கடமை. சினிமா தொழிலாளர்களின் சங்கமான பெப்சிசியில் உள்ள 23 சங்கங்கள் மூலம் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வருகிற மே 1ம் தேதி, அவர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் கொடுக்க இருக்கிறோம்” என கூறினார்.