சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜீத், விஜய் சேதுபதியை நேரில் அழைத்து அறிவுரை கூறியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் அஜீத், அவர் நடித்த வேதாளம் படப்பிடிப்பில் இருந்த போது, விஜய் சேதுபதியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அஜீத்திடமிருந்து அழைப்பு வந்ததும் ஆர்வத்துடன் அவரை பார்க்க சென்றுள்ளார் விஜய் சேதுபதி. அங்கு அவருக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார் அஜீத். அதன்பின் அவரிடம் பேசிய அஜீத், நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நிறைய பேருக்கு உதவியும் செய்வதாக கேள்விப்பட்டேன். எந்த காரணம் கொண்டும் இது அனைத்தையும் நிறுத்தி விடாதீர்கள் என அறிவுரை கூறினாராம்.

அஜீத்துடனான சந்திப்பு விஜய் சேதுபதிக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவரின் மனைவிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், விஜய் சேதுபதியின் மனைவி அஜீத்தின் தீவிர ரசிகையாம். எனவே, அவரை சந்திக்க சென்ற போது, ஏன் தன்னை அழைத்து செல்லவில்லை என கோபித்துக் கொண்டாராம். விரைவில் அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக விஜய் சேதுபதி உறுதியளித்துள்ளாராம்.