அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான புகார்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுகின்றன. இதனால் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஓபிஎஸ் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார் என தகவல்கள் வருகின்றன.

அதேபோல கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்களும் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுத்தால் அது வேறு மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சும் முதல்வர் இந்த விவகாரத்தை பொறுமையாக கையாளலாம் என நினைக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இத்தனை நாட்கள் இல்லாமல் தற்போது விஜயபாஸ்கர் மீது புகார் அனுப்பி இருப்பதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என சந்தேகிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்பதில் அவருக்கு கடும் நெருக்கடி இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.