தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடுகாட்டிற்கே சென்ற சம்பம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களிலும் நேற்று போராட்டம் வெடித்தது. 900 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.

அனிதாவின் உடலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் நேற்று முந்தினம் இரவு 10 மணிக்கு மேல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று பக்ரித் விழாவில் கலந்து கொள்ள வாணியம்பாடிக்கு வந்த விஜயகாந்த், அங்கிருந்து 7 மணிக்கு மேல்தான் அரியலூருக்கு கிளம்பியுள்ளார். இதற்கு மேல் போனால் சரியான நேரத்தில் நீங்கள் அங்கு போய் சேர முடியாது. நாளைக்கு போகலாம் என தேமுதிக நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால், என்னவானாலும் பரவாயில்லை அனிதாவின் முகத்தை பார்த்தே ஆக வேண்டும் என விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

அதன் படி அங்கு அனைவரும் செல்ல, அரியலூர் தேமுதிக நிர்வாகி ஒருவர் விஜயகாந்திடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அனிதாவின் உடலை எடுத்துவிட்டனர் எனக்கூற, அனிதாவை பார்க்காமல் செல்ல மாட்டேன். சுடுகாட்டிற்கு செல்வோம் எனக்கூறி அங்கு சென்றுள்ளார் கேப்டன்.

அனிதாவின் உடலை எரியூட்டுவதற்கான வேலையை அங்கிருந்தவர்கள் செய்து கொண்டிருந்த போது, சரியாக 10.45 மணிக்கு அங்கே சென்ற விஜயகாந்த், கண்கள் கலங்கியபடி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

விஜயகாந்தின் நடவடிக்கை அரியலூர் மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.