உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பியுள்ள அவரது உடல்நிலை தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் போது தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி இறந்தார். இதனால் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த விஜயகாந்தால் வர முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜயகாந்த். அந்த வீடியோவில் விஜயகாந்த் அழுதுகொண்டு பேசியது மிகவும் உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய அவர் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு தனது மனைவி மற்றும் மைத்துனருடன் வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவில் விஜயகாந்த் நடக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி வருகிறார்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வருகின்றனர். அப்போது ஒரு இடத்தில் அப்படியே நின்றுகொண்ட விஜயகாந்த் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர முடியாதவர் போல காணப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்ற விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் வருவார் என அவரது தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ அவரது தொண்டர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.