தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், விரைவில் நடக்க உள்ள தேமுதிக மாநாட்டில் அவர் உரையாற்றுவார் எனவும் அவரது மைத்துனரும் கட்சியின் இளைஞரணி செயலாளருமான எல்.கே சுதீஷ் கூறியுள்ளார்.

வழக்கு ஒன்றில் ஆஜராக திருச்சி வந்த எல்.கே.சுதீஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார். விரைவில் கட்சியின் மாநாடு அறிவிக்கப்படவுள்ளது. அதில் விஜயகாந்த் உரையாற்றுவார். தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இதுகுறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.

முன்னதாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்ததையடுத்து தேமுதிக சார்பிலும் அவரது குடும்பத்தினர் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அவர் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.