சென்னை விமான நிலையம் வந்த பின்பும், பல மணி நேரங்கள் கழித்தே தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியே வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க சென்ற விஜயகாந்த் சிகிச்சை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்புவதாக நேற்றே செய்திகள் வெளியானது. ஆனால், இன்று காலை அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் புகைப்படமோ, வீடியோவோ எதுவும் வெளியாகவில்லை. எனவே, அவர் வந்துவிட்டாரா? சிகிச்சை முடிந்து எப்படி இருக்கிறார்? என்கிற எதிர்பார்ப்பும், பதட்டமும் அவரின் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை வந்த விஜயகாந்த், பிரேமலதா மற்றும் அவரின் மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் இன்று பகல் 1 மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். அப்போது, தேமுதிக தொண்டர்கள் பலரும் விஜயகாந்தை வரவேற்றனர்.

இதுகுறித்து பேட்டியளித்த பிரேமலதா “ கேப்டன் நன்றாக இருக்கிறார். 25 மணி நேரம் பயணம் செய்து அதிகாலை 3 மணிக்குதான் வந்தோம். எனவே, அவர் கொஞ்சம் ஓய்வு எடுத்தார். அதன்பின் காலை உணவு சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது” என தெரிவித்தார். மேலும், தக்க சமயத்தில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் எனக்கூறிவிட்டு அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

ஓய்வு எடுப்பது எனில் அவர் வீட்டில் சென்றே எடுத்திருக்கலாம். விமான நிலையத்தில் ஏன் ஓய்வு எடுக்க வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.