துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொருளாலர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், துரைமுருகனின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர். அதில், சில கோடிகள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், அப்பணம் அதிமுக அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான பணம் எனவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வடசென்னை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் “தேமுதிகவை பகைத்துக்கொண்டால் என்னவாகும் என்பதற்கு துரைமுருகனே சாட்சி” எனப் பேசியுள்ளார்.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் போதே திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக முயன்ற போது அதை வெளியே கூறி தேமுதிகவின் மூக்கை உடைத்தவர் துரைமுருகன். எனவே. அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டே விஜயபிரபாகரன் இப்படி பேசியிருப்பதாக தெரிகிறது.