சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன? வெளியான ரகசியம்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘ஒருபக்க கதை’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சென்சார் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். ‘தெறி’ படத்தில் நடித்த இயக்குனர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்னவென்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நடிகராகவே நடிக்கிறாராம். அவர் எந்த நடிகராக நடிக்கிறார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறாராம்.

ஒரு கலைஞனுக்கும், அவன் சம்பந்தப்பட்ட கலைக்கும் இடையில் உள்ள பயணம்தான் படத்தின் மையக்கருவாம். விஜய் சேதுபதி நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை ஒரு நடிகராக அவர் எந்த படத்திலும் நடித்ததில்லை. இதுவே அவர் நடிகராக நடிப்பது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.