தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படம் தமிழில் ரீமேக்காகிறது. இதில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். துருவ் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கி, அதில் நடித்தும் உள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் பெரிய திரையில் கதாநாயகனாக அவதாரமெடுக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் உரிமையை இ4 என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

துருவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விவரத்தை அவரது அப்பா விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், இப்படத்தை யார் இயக்கப் போகிறார்? இப்படத்தின் கதாநாயகி யார்? என்ற விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை. கூடிய விரைவில் அதை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை சந்தீப் ரெட்டி என்பவர் இயக்கியிருந்தார். படிப்பிலும், காதலிலும் தோல்வியடைந்த ஒருவன் குடிக்கு அடிமையாகி அதிலிருந்து எப்படி அவன் மீள்கிறார் என்பதை மையப்படுத்தி உருவாகியிருந்தது. இப்படத்தின் திரைக்கதை, வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே அளவுக்கு தமிழிலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.