தர்மபுரி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய கிராம மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த ஊர் தலைவருக்கு பரிவட்டம் கட்டி விழா எடுக்க பல ஆண்டுகளுக்கு பின்ன்னர் தற்போது முடிவெடுத்தனர். இதனை அமைச்சர் கே.பி.அன்பழகன் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் கிராம மக்கள் அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி பரிவட்டம் கட்டி விழா எடுத்துள்ளனர்.

புளியம்பட்ட்டி கிராம மக்கள் ஊர் தலைவரை தேர்வு செய்து பரிவட்டம் கட்டப்படும் நிகழ்ச்சி நீண்ட வருடங்களுக்குப் பிறகு நேற்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி அருகிலுள்ள ஊர் மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி, போஸ்டர்கள் ஒட்டி பிரமாண்டமாக விழா எடுக்க ஏற்பாடு செய்திருந்தனர் கிராம மக்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் காவல் நிலைய போலீஸார் புளியம்பட்டிக்கு வந்து விழாவை நடத்தக்கூடாது என நிகழ்ச்சி பொறுப்பாளர்களை அழைத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு எங்கள் ஊர் தலைவரை தேர்வு செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை என நியாயம் கேட்டனர்.

எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உள்ளூர் அமைச்சரின் பிரஷர்தான் காரணம். மற்றபடி ஒன்றுமில்லை என்று போலிசார் கூறியுள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி விழாவுக்கு அனுமதி அளித்தனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் விழா இனிதே அமைச்சரின் எதிர்ப்பை மீறி நடந்துள்ளது.