இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் அதிக ரன் குவித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இருபது ஓவர், ஒருநாள் போட்டி தொடர்களை முடித்துக்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன், லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய கேப்டன் விராட் கோலி 25 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தாலும் இந்த ஆண்டில் அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேரிஸ்டோவ் 1389 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார். இதனை தற்போது இந்திய கேப்டன் விராட் கோலி முறியடித்து 15 ரன்கள் அவரை விட முன்னிலையில் உள்ளார். இந்த ஆண்டில் 25 இன்னிங்சில் விளையாடிய விராட் கோலி 1404 ரன்கள் குவித்துள்ளார். கோலியை தொடர்ந்து ஷிகார் தவான் இந்திய வீரர்களில் 1055 ரன் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.