ஒரு திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிடக் கூடாது என நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் நெருப்புடா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு அப்படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.

அந்த விழாவில் நடிகர்கள் விஷால், விவேக் , பிரபு, சத்யராஜ், தனுஷ் இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய விஷால் “ ஒரு திரைப்படம் வெளியான அன்றே ஊடகங்களும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் வெளிவருகிறது. இதனால், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. அதனால், படம் வெளியாகி 3 நாட்களுக்கு எந்த ஊடகமும் விமர்சனங்களை வெளியிடக்கூடாது. அதேபோல், சமூக வலைத்தளங்களில் சினிமாக்களை விமர்சிக்கும் போக்கை முறைப்படுத்த வேண்டும். முக்கியமாக, மற்றவர்களை காயப்படுத்துவது போல் விமர்சனம் செய்யக்கூடாது.

அதேபோல், சினிமா துறையில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, தயாரிப்பாளர்களும் சினிமாவை எடுக்க வேண்டும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என நினைத்து படம் எடுக்கக் கூடாது. அனுபவம் வாய்ந்த வினியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று படங்களை விற்பனை செய்யுங்கள். அப்போது எல்லாம் சரியாக நடக்கும்” என விஷால் பேசினார்.

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.