தன்ஷிகாவை அழவைத்த விவகாரம்: டி.ஆருக்கு விஷால் கண்டனம்

சமீபத்தில் நடந்த ‘விழித்திரு’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேடையில் தனது பெயரை சொல்லவில்லை என்பதற்காக டி.ராஜேந்தர் அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். டி.ராஜேந்தரின் பேச்சால் மேடையிலேயே தன்ஷிகா கண்ணீர் விட்டு அழ நேர்ந்தது. இதனால், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தன்ஷிகாவை பொதுமேடையில் கடுமையாக விமர்சித்த டி.ஆருக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டி.ஆர். அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டி.ஆர். சுட்டிக் காட்டிய பின்னர் தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம்.

ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆருக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இது நடிகர்கள் விதார்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு… சக நடிகை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நாகரீகம் கருதி அதனை கைதட்டி ரசிக்காமலாவது இருந்திருக்கலாம்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.