சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வீரப்பன் பிரபலமான முகநூல் பதிவர். இவர் நேற்று முன்தினம் காலா திரைப்படம் முகநூலில் லைவ் செய்யப்பட்டது குறித்து ஆதங்கப்பட்டு ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்தார். ஆனால் அதன் அர்த்தத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் அவரது முகநூலை முடக்கியுள்ளது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம்.

நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் காலா திரைப்படம் சிங்கப்பூரில் இருந்து நேரலை செய்யப்பட்டது. அதன் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து தனது ஃபேஸ்புக்கில் போட்டு இப்படி எல்லாம் நடக்கிறதே என ஆதங்கப்பட்டிருந்தார் அன்பழகன் வீரப்பன். ஆனால் அவரது முகநூல் பக்கத்தின் மீது புகார் தெரிவித்து அதனை முடக்கியிருக்கிறது விஷால் தலைமையிலான திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

இதுகுறித்து பேசிய அன்பழகன் வீரப்பன், நான் ஒரு சைபர் க்ரைம் ஆக்டிவிஸ்ட், சட்டம் படித்தவன். தவறான செய்திகளை நான் என்றுமே பதிவிட்டது இல்லை. காலா படம் ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதை ஒரு செய்தியாக பதிவு செய்தேன். அடப்பாவிகளே ஃபேஸ்புக்கில் இப்படி லைவ் பண்றீங்களே…. ரொம்ப ஓவர்னு கமெண்ட் போட்டேன். அதாவது வீடியோ பைரசிக்கு எதிராக பதிவிட்டேன்.

ஆனால் விஷாலின் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக என் முகநூலை முடக்கி என் மீது வீடியோ பைரசி என புகார் கூறியிருக்கிறார்கள். வீடியோ பைரசிக்கும், அதை எதிர்க்கும் பதிவுக்கும் வித்தியாசம் கூட புரியாத முட்டாளாக விஷால் இருக்கிறாரா என்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.

மேலும், என்னை முடக்கியதன் மூலம், பைரசிக்கு ஆதரவாக… காலாவுக்கு எதிராக விஷால் இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து விஷால் மீது வழக்கு தொடுக்கப்போகிறேன் என்றார் அன்பழகன் வீரப்பன்.

Loading...