நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவர் என சினிமா துறையில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் விஷால், தொடர்ந்து சினிமா துறையில் அதிரடியான முடிவுகளை செயல்படுத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு சங்க தேர்தலிலும் வெற்றி பெறும் சமயத்தில், அடுத்ததாக விஷால் அரசியலில் குதிப்பார் என்று பல்வேறு ஊடகங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தது.

ஆனால், விஷாலோ தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றே கூறிக் கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது நான் அரசியலில் நுழையப் போகிறேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்தபோது, நல்லது செய்வதற்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தை அரசியல் என்று சொன்னால், நான் அரசியலில் நுழைவேன். நான் நலலது செய்வதை எப்போதும் நிறுத்த மாட்டேன். தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருப்பேன்.

அரசியலுக்கு வருவதற்காக நான் நற்பணிகளை செய்து வருவதாக கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். வழக்கம்போலவே, இவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பதற்கு ஒரு குழப்பமான பதிலையே கூறியுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.