பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவின் மார்க்கெட் தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது பெருகியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஓவியாவை தங்கள் படங்களில் கமிட் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஓவியா நடிக்க ஒப்பந்தமாகியிருந்த சில படங்களிலும், அவரது கதாபாத்திரத்தை மேலும் வலுவாக கொடுக்க முயற்சி எடுத்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் ஓவியா, விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் கதாநாயகியாக ரெஜினா ஒப்பந்தமாகியிருந்தார். ஓவியாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். இரண்டாவது ஹீரோயின் என்பதால் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே ஓவியாவுக்கு ஒதுக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு மவுசு கூடியிருக்கிற நிலையில், இந்த படத்தில் ஓவியாவின் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக காட்ட படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க கதையில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆனால், ஓவியா சம்பளம் விஷயத்தில் கொஞ்சம் அடம்பிடிப்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஓவியா இதற்கு ஒத்துப்போனால் கதையில் மாற்றம் செய்யப்போவதாகவும், இல்லையென்றால் ஏற்கெனவே உள்ளதுபோல் படம்பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை செல்லப்பா என்பவர் இயக்குகிறார். கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.