அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த ஆண்டுத் தொடக்கமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு நம்பிக்கை அளிக்கும் ஆண்டாகத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டுப் படங்களே. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி  பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ரிலிஸாகின. இரண்டுப் படங்களுமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களைக் கொண்டவையாக இருந்ததனால் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களை கிட்டத்தட்ட சமமாகப் பிரித்து ரிலிஸ் ஆகின. தமிழக அளவில் பேட்ட படத்தைத் தாண்டி விஸ்வாசம் படம் பல சாதனைகளைப் புரிந்தது.

தமிழக அளவில் தியேட்டர்கள் மூலம் அதிக வசூல் செய்த படங்களில் சர்காரின் வசூலை முறியடித்து முதல் இடத்தில் உள்ளது விஸ்வாசம். சில மாதங்களுக்கு முன்னர் அமேஸான் பிரைமில் ரிலிஸாகி அங்கேயும் சாதனைப் படைத்தது.  இதையடுத்து படம் வெளியாகி 4 மாதம் கழித்து அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி இந்த படத்தை சன் டிவி ஒளிப்பரப்பியது. அபோது இந்த படம் 18.1 மில்லியன் (1.8 கோடி ) பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் சின்னத்திரை வரலாற்றில் புதிய சாதனையாகும். இதற்கு முன்னர் சர்கார், பாகுபலி ஆகியப் படங்களின் சாதனையை இதன் மூலம் விஸ்வாசம் முறியடித்துள்ளது.