சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் ஒரு எமோஷனல் மற்றும் கமர்ஷியல் பேக்கேஜாக வெளிவந்துள்ளது.

மனைவியை பிரிந்து தேனியில் வாழும் தூக்குதுரை அஜித், மும்பை சென்று ஆபத்தில் இருக்கும் தனது மகளை காப்பாற்றி, அவளின் லட்சியைத்தை நிறைவேற்ற உதவுவதே விஸ்வாசம் படத்தின் ஒருவரிக்கதை.

மனைவி நயன்தாராவை பிரிந்து வாழும் அஜித், குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அவரை சந்திக்க மும்பை செல்கிறார்.நயன்தாரா அவரை உதாசினப்படுத்த, ஊர் திரும்பு வேளையில் தனது மகளின் உயிருக்கு ஆபத்தை இருப்பதை உணர்ந்து, அப்பா என்பதை மறைத்து அவரின் சொந்த மகளுக்கே ஒரு பாதுகாவலனாக இருக்கிறார். ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவதே லட்சியமாக கொண்டிருக்கும் மகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். மகளை கொல்ல நினைக்கும் வில்லன் யார்? அதை எப்படி அஜித் முறியடித்தார்? மகளின் லட்சியம் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.

நீண்ட வருடங்களுக்கு பின் வித்தியாசமான புதிய அஜித். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் அடாவடி, அலப்பறை செய்து வாழ்ந்து வரும் தூக்குதுரையாக அவரின் அறிமுக காட்சியே அதகளம். நயன்தாராவின் துணிச்சல், அழகு ஆகியவற்றை ரசித்து அவரை வர்ணிக்கும் காட்சியிலும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் என்பது புரியாமல் ‘உங்களுக்கு கல்யாணமா… கல்யாணத்தை செமயா செஞ்சிடலாம்’ என வெள்ளந்தியாக பேசும் போதும் மனசை அள்ளுகிறார்.

அதேபோல், மகளிடம் தந்தை எனக்கூற முடியாமல், பாசத்தை காட்ட முடியாமல் நெக்குருகும் காட்சிகளிலும், இந்த உலகத்திலேயே எனக்கு பிடிக்காதவர் என் அப்பா என மகள் கூறும்போது, பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு காரிலிருந்து இறங்கி மழையில் நிற்கும் காட்சியிலும் கண்ணீரை வரவழைக்கிறார். படத்தின் இறுதியில் மகள் முதல் முதலாக ‘அப்பா’ என அழைக்கும் போது, ‘என் சாமி’ என கதறி அழும் போது மனதை கரைய வைக்கிறார். அவரின் நிஜமான சால்ட் அண்ட் பெப்பர் லுக் அவரின் கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போகிறது. நடனம், சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

நயனுக்கு அஜித்திற்கு இணையான கதாபாத்திரம். காதலில் உருகும்போதும், கண்டிப்பில் கறார் காட்டும்போதும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கு…இரண்டும் பாதி பொதுவான ரசிகர்களுக்கு என கவனமாக திரைக்கதையை எழுதியுள்ளார் சிவா. தந்தை – மகள் செண்டிமெண்ட் நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. ரோபோ சங்கர், தம்பி ராமய்யா இருந்தாலும் அனைத்து காமெடிகளையும் அஜித்தே செய்து விடுகிறார். இரண்டாம் பகுதியில் விவேக் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.அஜித்தி மகளாக வரும் அனிகாவின் நடிப்பும் அபாரம்.

வாழ்க்கையில ஒரு தடவ கூட சிரிக்காத ஏழை கிடையாது… ஒரு தடவை கூட அழாத பணக்காரன் கிடையாது… 18 வயதுக்கு கீழே குழந்தை ஒரு குழந்தை இறந்தால் அது தற்கொலை அல்ல.. கொலை.. என்கிற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. குழந்தைகள் நம் மூலமாக வருகிறார்கள். ஆனால், நமக்காக அல்ல.. நம் விருப்பங்களை, வெற்றிகளை அவர்கள் மேல் திணிக்ககூடாது.. அவர்கள் விருப்படி வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற அழுத்தமான கருத்தை விஸ்வாசம் படம் பேசுகிறது.

பணக்கார வில்லன் என்றாலே ஜெகபதி பாபுவை கூப்பிட்டு விடுவார்கள் போலிருக்குறது. அஜித்தின் மகளை கொல்ல நினைப்பதை தவிர வேறு எந்த வில்லத்தனமும் செய்யாததால் ஒரு வீக்கான வில்லனகாத்தான் தெரிகிறார். இமானின் இசையில் அடாவடி தூக்குதுரை பாடல் அதிரடி என்றால், கண்ணானே கண்ணே பாடல் சூப்பர் மெலடியாக வந்திருக்கிறது. மற்ற பாடல்கள் நம்மை ஈர்க்கவில்லை. அஜித் எப்படியும் தன் மகளை வெற்றி பெற வைத்துவிடுவார். இறுதியில் எப்படியும் நயன் அஜித்தை ஏற்றுக்கொண்டு விடுவார் என்பதே நமக்கு முன்பே தெரியும் என்பதால் பெரிய திருப்பங்களோ, சுவாரஸ்யமோ இல்லை. ஆனாலும், தந்தை – மகள் பாசக் காட்சிகள் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

விவேகம் படம் அஜித் ரசிகர்களை ஏமாற்றியதால் ‘வீரம்’ போல் ஒரு படம் பண்ண வேண்டும், அஜித் மற்றும் பொதுவான ரசிகர்கள் இருவருக்கும் பிடிக்க வேண்டும் என நினைத்து கதையை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் சிவா.

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் ஒரு மாபெரும் பொங்கல் விருந்து. குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்..