விவேகம் படத்தின் டிரெய்லர் வீடியோ பற்றிய அறிவிப்பு சில தொழில் நுட்ப காரணங்களால் தள்ளிப்போனது தெரியவந்துள்ளது.

அஜீத் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் விவேகம். இயக்குனர் சிவா தொடர்ச்சியாக அஜீத்தை வைத்து இயக்கும் மூன்றாவது படம் இது. இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற,  அஜீத்தின் அசத்தலான புகைப்படங்கள், பாடல்கள் என படக்குழு ஓவ்வொன்றாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது. விரைவில் இப்படம் வெளியாவதால், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகாமல் போய்விடுமோ என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது.

இந்நிலையில்தான் இப்படத்தின் எடிட்டர் ரூபன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், விவேகம் படத்தின் ட்ரெய்லர் ரெடியாக இருக்கிறது. எப்போது வெளியாகும் என இயக்குனர் சிவா அறிவிப்பார் என தெரிவித்திருந்தார். எனவே, இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகும் என அஜீத் ரசிகர்கள் காத்திருந்தனர்.  ஆனால், சிவாவிடமிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இது அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள படக்குழு “டிரெய்லர் வீடியோ தயாராக இருக்கிறது. டிரெய்லர் எப்போது என நேற்று அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் அது தள்ளிப்போய் விட்டது.  கண்டிப்பாக இன்று இரவு அல்லது நாளை டிரெய்லர் வெளியாகும்” என படக்குழு தெரிவித்துள்ளது.