நடிகர் விவேக் சமூகப்பணிகளில் தன்னை இணைத்து கொண்டு பல நாட்களாகிறது. மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.தனது கலாம் பவுண்டேசன் சார்பாக நிறைய மரக்கன்றுகளை கல்லூரி, மற்றும் பள்ளிகளில் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள 150 ஆண்டு பழமையான கடம்ப மரம் அழிந்து வரும் நிலையில் இருந்ததை தனது சகோதரி விஜயலட்சுமி மூலம் அறிந்த விவேக் அதற்குரிய முயற்சியாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதை அறிந்த அவர் டுவிட்டர் நண்பர் தனது நண்பர்கள் குழுவுடன் பாப்பாபட்டி புறப்பட்டார். அவர்கள் புவியியல் முறைப்படி மாட்டு சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றை குழைத்து மரத்தில் பூசியும், வைக்கோலை திரி, திரியாக வடம் போன்று சுற்றியும் வைத்தியம் பார்த்துள்ளனர். 3 வாரம் கழித்து மரம் துளிர்விடவில்லை என்றால், அதற்கு உயிர் இல்லை என்று கூறி இருந்தனர். ஆனால் 3 வாரம் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது 3 மாதம் கழித்து மரம் துளிர்விட்டுள்ளது. பட்டுப்போன மரத்தில் பச்சை பசேல் என இலைகள் துளிர்விட ஆரம்பித் துள்ளன.

இதை விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள தகவலில் தனது கருத்தாக பதிவிட்டு  மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.