சோஷியல் மீடியாவை சரியாக பயன்படுத்தினால் அடுத்த ஆட்சி பாமக ஆட்சி தான் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா சதுக்கம் அருகே உள்ள அண்ணா அரங்கத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதற்கு அதன் நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இதில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ், சோஷியல் மீடியாக்களை தவறாக பயன்படுத்தினால் கட்சிக்கு அவப்பெயர் தான் ஏற்படும். அதனை கட்சி வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அப்படி செய்தால் நாம் ஆட்சியை பிடித்து விடலாம். நாட்டின் பிற கட்சிகளுக்கே பாமக தான் வழிகாட்டியாக திகழ்கிறது என்றார்.

மேலும், தமிழகத்தில் உள்ள 40 சதவீத இளைஞர்கள் பாமகவில் தான் உள்ளனர். அவர்கள் அன்புமணியை முதல்வராக்க முயற்சிக்கின்றனர். அவதூறு அரசியலை பரப்புபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்சியின் நலன் கருதி அனைவரையும் மதித்து கட்டுப்பாட்டுடன் இளைஞர்கள் நடக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.