திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி அங்கு தற்போது உருவாகியுள்ளது. இந்த போட்டி தலைவர் போட்டியில் ஸ்டாலினுக்கு அழகிரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

கருணாநிதி இறந்தபோதும் அதன் பின்னரும் அரசியல் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார் அழகிரி. தன்னிடம் அரசியல் குறித்து பேச வருபவர்களிடம் அப்பாவின் காரியம் முடியும் வரை அரசியல் பேச வேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என கூறிவந்தார் அழகிரி.

ஆனால் காரியம் முடியும் முன்னர் தற்போது அழகிரியே பொறுமையை இழந்து விட்டார். கலைஞரின் விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும் என மெரினாவில் பேட்டியளித்து அதிர்வை ஏற்படுத்தியுள்ளார். அழகிரி இப்படி பொறுமையை இழந்ததற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என அழகிரி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கருணாநிதியின் காரியம் முடியும் வரைக்கும் பொறுமையாக இருக்கலாம் என அழகிரி நினைத்தாராம். ஆனால் அதுக்குள்ளயே செயற்குழுவை பொதுக்குழு ரேஞ்சுக்கு கூட்டி ஸ்டாலின் தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டார். கருணாநிதி இல்லாத தற்போதைய சூழலில் பொதுச்செயலாளர் அன்பழகன் தான் மூத்தவர். அவருடைய தலைமையில் தான் கருணாநிதிக்கு இரங்கல் செயற்குழு நடத்தியிருக்கணும்.

ஆனால் ஸ்டாலின் தலைமையில் செயற்குழுவை கூட்டி ஸ்டாலினை மீண்டும், மீண்டும் முன்னிலைப் படுத்துகிறார்கள். இந்த செயல்கள் தான் அழகிரியை காரியம் முடியும் முன்னரே பொறுமை இழக்க வைத்ததாக பேசப்படுகிறது.