சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் பயணம் செய்யும் விவகாரம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனாலும், அதை சில கும்பல் ஏற்காமல் அங்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் கூட திருநங்கைகளை ஆண் பக்தர்கள் தடுத்து நிறுத்திய போது போலீசார் அவர்களை பாதுகாப்புடன் மேல் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர்.

இந்நிலையில், மனிதி பெண்கள் அமைப்பை சேர்ந்த 10 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட 11 பெண்கள் இன்று சபரிமலைக்கு வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள அரசு ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அவர்களை உள்ளே விடாமல் ஆண் பக்தர்கள் தடுத்தனர். மேலும், போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அதன்பின், போலீசார் அந்த பெண்களை பாதுகாப்புடன் சபரிமலைக்கு மேலே அழைத்து செல்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.