Home அரசியல் பாசிச பாஜக ஒழிக; தமிழிசை வாக்குவாதம்: மாணவி சோஃபியா கைது!

பாசிச பாஜக ஒழிக; தமிழிசை வாக்குவாதம்: மாணவி சோஃபியா கைது!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்த விமானத்தில் அவரை பார்த்த ஆராய்ச்சி படிப்பை முடித்த சோஃபியா என்ற மாணவி பாசிச பாஜக ஒழிக என கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவத்துக்காக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அந்த விமானத்தில் கனடாவில் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு பெற்றோருடன் நாடு திரும்பிக்கொண்டிருந்தார் சோஃபியா என்ற பெண்.

அந்த விமானத்தில் தமிழிசையை பார்த்ததும் பாசிச பாஜக ஒழிக என்று சோஃபியா கோஷமெழுப்பியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழிசை விமானம் தரையிறங்கியதும் சோஃபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விமானம் ஒரு பொது இடம். அதில் பாஜகவுக்கு எதிராக பாசிச பாஜக ஒழிக என்று எப்படி நீங்கள் கூச்சலிடலாம்? என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து கூச்சல் எழுப்ப தனக்கு உரிமை உள்ளதாக பதிலுக்கு சோஃபியாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமானநிலைய காவல்நிலையத்திலும் தான் பயணித்த விமான நிறுவனத்திடமும் சோஃபியா மீது புகார் அளித்தார் தமிழிசை. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வைத்து சோஃபியாவிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.