லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி பெண் எஸ்பியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஏடிஜிபி தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் இயக்குநருக்கு அடுத்த பதவியில் இருக்கக் கூடிய போலீஸ் ஐஜி ஒருவர் அவருக்கு கீழ் பணியாற்றி வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பெண் அதிகாரி பலமுறை அந்த உயர் அதிகாரியை எச்சரித்துள்ளார். ஆனால் அதையும் மீறி அவர் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார். இதனால் பலமுறை அவர் ஐஜியை எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த ஐஜி சில தினங்களுக்கு முன்னர் பெண் எஸ்பியை தனது அலுவலகத்துக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது திடீரென கதவை உள்பக்கமாக பூட்டிய ஐஜி அந்த பெண் எஸ்பியை தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியவாரு பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் எஸ்பி கூச்சல் போடவே, பெண் ஊழியர்கள் கதவை தட்டியதும் பெண் அதிகாரியை ஐஜி விட்டுவிட்டார்.

அப்போது முதல் பெண் எஸ்பி திடீரென மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அதோடு இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஜெயந்த் முரளியிடம் பெண் எஸ்பி புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே அதிகாரிகள் மீட்டிங் நடக்கும்போதும் சோதனை குறித்து தகவல் தெரிவிக்க செல்போனில் தொடர்புகொண்டபோது தனிப்பட்ட முறையில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் பெண் எஸ்பி பாலியல் தொந்தரவு குறித்து டிஜிபி டிகே ராஜேந்திரன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் சில நாட்களுக்கு முன்னர் புகார் அளித்தார். அந்த புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தான் கொடுத்த புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் முதல்வரின் செயலாளர் விஜயகுமார், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டிகே ராஜேந்திரன் ஆகியோரிடம் நேற்று முன்தினம் மீண்டும் புகார் அளித்தார்.

முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கம் கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெண் போலீஸ் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள மூத்த நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கொண்ட கமிட்டி நேற்று அவசரமாக அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை கொடுக்கும்.