நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும், தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை எனவும் பாஜகவின் எடியூரப்பா தேர்தல் ஆணையத்துக்கு பகீர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. ஆளுநர் மூலம் ஆட்சியை பிடித்து மஜத, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி பெரும்பான்மையை அடைய பாஜக முயன்றது. ஆனால் அது முடியாமல் போக ஒரு நாள் முதல்வராக இருந்து தனது பதவியை வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இதனால் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவில் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் ஏராளமான விவிபேட் இயந்திரங்கள் கேட்பாரற்று கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை காரணமாக வைத்து எடியூரப்பா தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், விவிபேட் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையம் கூறியபடி, கர்நாடக சட்டசபைத் தேர்தல் நேர்மையான முறையில், நியாயமான வழியில் நடந்திருக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கூறிய கூற்றுக்களில் உண்மை இல்லை என்பதையும் உணர முடிகிறது. இந்த தேர்தலில் மோசடி நடந்துள்ளது என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது, கண்டுபிடிக்கப்பட்ட விவிபேட் இயந்திரங்கள் போலியானவை. அவை குஜராத் ஜோதி பிளாஸ்டிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போலி இயந்திரங்கள். விவிபேட் இயந்திரங்களை செயல்படுத்த தனியாக 6 இலக்க கோட் வார்த்தை உண்டு. ஆனால் இந்த இயந்திரங்களில் அவை இல்லை. இதற்கும், தேர்தல் நடந்த முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.