kovai news

ஒரு தலை காதலால் மனமுடைந்த மாணவர், தூக்கில் தொங்குவது போல் ‘செல்பி’ எடுத்து வாட்ஸ் அப்பில் மாணவிக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் சத்தியசீலன். பெயிண்டர். இவருடைய மகன் ஹரிகரசுதன் (வயது 20). இவர் கோவை ஈச்சனாரியில் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஹரிகரசுதன் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அண்மையில் அந்த மாணவியிடம் தனது காதலை ஹரிகரசுதன் தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய காதலுக்கு மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஹரிகரசுதன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

உடனே வீட்டின் உள்ள ஒரு அறையில் தாழிட்டு கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டார். பின்னர் மாணவர் ஹரிகரசுதன் தூக்கில் தொங்குவது போல ‘செல்பி‘ எடுத்துள்ளார். அதனை மாணவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினார்.

பின்னர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய அவரது தாயார் சாவித்திரி, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.