TikTok video – டிக் டாக் வீடியோ எடுக்கும் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜப்ராபாத் பகுதியில் வசித்து வந்தவர் சல்மான்(19). இவர் தனது கல்லூரி நண்பர்களான அமிர் மற்றும் சொகைல் ஆகியோருடன் கடந்த 13ம் தேதி இரவு இந்தியா கேட் பகுதிக்கு சென்றனர். வீடு திரும்பும் போது துப்பாக்கியால் உடலில் குறி வைப்பது போன்ற டிக் டாக் வீடியோ எடுக்க முடிவு செய்தனர்.

டிரைவர் இருக்கையில் சல்மான் அமர்ந்திருக்க, அவரின் கன்னத்தில் துப்பாக்கியை காட்டியவாறு சொகைல் போஸ் கொடுத்தார். அப்போது திடீரென துப்பாக்கி வெடித்தது. இதில் படுகாயமடைந்த சல்மான் காரிலே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதில் அதிர்ச்சியடைந்த சல்மானின் நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிவிட்டனர். எனவே, போலீசாருக்கு பயந்து அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சல்மானின் நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.