அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 20 வயதான மைக்கேல் ட்ரூட் எனும் இளைஞர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மயங்கினார். இதனயடுத்து உடனடியாக உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

மேலும் அவர் உடலில் இருந்து உயிர்காக்கும் சிகிச்சைக் கருவிகளையும் எடுத்து பிணக்கூறாய்வுக்கு தயார் செய்துள்ளனர். ஆனால் அனைவரும் எதிர்பாராத விதமாக சிறிது நேரத்தில் அவர் உடலில் அசைவுகள் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அவருக்கு மீண்டும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு மருத்துவமனையில் உள்ள அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவரது முழு உடலையும் மீண்டும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உடலில் மின்சாரம் தாக்கியதால் இதயம் மற்றும் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.